பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மகா வித்தியாலயத்தை மிக விரைவிலேயே தமிழ் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் அகிலசாலிய எல்லாவள தெரிவித்தார்.
பலாங்கொடை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவ ஸ்தானங்களில் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பலாங்கொடை தொகுதியிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அதிக அளவில் எனக்கு வாக்குகளை அளித்த படியால் 26 வருடங்களுக்குப் பிறகு பலாங்கொடை தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதை நினைத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அதேசமயம் என்னை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த சிறுபான்மை மக்களை நான் பாராட்டிக் கௌரவிப்பதுடன் அவர்களது தேவைகளை எதிர்வரும் காலங்களில் இனம்கண்டு பூர்த்திசெய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
தேர்தல் காலங்களில் இப்பகுதி தமிழ் மக்கள் என்னிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றில் பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மகா வித்தியாலயத்தினை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை மிக விரைவில் நாம் பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.