இரவுநேர ஊரடங்கு வௌவால்களுக்கா? முருத்தெட்டுவே தேரர் சீற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. மாகாணசபைத் தேர்தலொன்று நடத்தப்படுமானால் இது தெட்டத்தெளிவாக தெரியவரும். அதேபோல இரவுவேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆந்தைகள் மற்றும் வௌவால்களுக்காகவா என கேட்கவிரும்புகின்றேன் – என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

“ தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று புரியவில்லை. பிடிவாதபோக்கில் ஆட்சியை முன்னெடுத்துவருகின்றனர். இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் இன்று எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். தேரரே, உங்களை நம்பிதானே வாக்களித்தோம், இன்று என்ன நடக்கின்றது என கடும் விரக்தியை வெளியிடுவதுடன், அரசின் பயணம் மாற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

கேஸ் இருக்கின்றதா, கிழங்கு இருக்கின்றதா என அன்று மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பினார். ஆனால் இன்று கேசும் இல்லை, கிழங்கும் இல்லை. எமது பலத்தை காட்டவேண்டிய நேரம்தான் வந்துள்ளது.

இரவுவேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்தைகளுக்கும், வௌவால்களுக்குமா இவ்வாறு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது? ஆட்சியாளர்கள் மக்களின் மனநிலையை அறிந்து செயற்பட வேண்டும். மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும்.

முடிந்தால் மாகாண சபை அல்லது பொதுத்தேர்தலை நடத்திபாருங்கள். அரசுமீது மக்களுக்குள்ள நம்பிக்கை என்னவென்பது தெளிவாக தெரியவரும். ஜே.ஆர். அன்று ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றார். ஆனால் அடுத்த தேர்தலிலேயே அக்கட்சியின் எம்.பிக்கள் எண்ணிக்கை 8 ஆக குறைந்தது. மக்களின் கோரிக்கை ஏற்கப்படாமையே இதற்கு பிரதான காரணம் என்பதை தற்போதைய அரசும் புரிந்துகொள்ள வேண்டும். “ – என்றார்.

Related Articles

Latest Articles