இரவு நேர கூந்தல் பராமரிப்பு பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு

பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தமாகிவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

* பெண்கள் நிறைய பேர் இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கட்டிக்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறானது. அப்படி இறுக்கமாக கூந்தலில் கொண்டை போட்டுக்கொள்வது மயிர்கால்களை கடுமையாக பாதிக்கும். கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது. அதனால் கூந்தல் முடிகள் பாதிப்புக்குள்ளாகும்.

* இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக சீவுவதும் நல்லது. அப்படி செய்தால் கூந்தல் முடியில் சிக்கல் விழாமல் இருக்கும். இரவில் தூங்கும்போது சிக்கல்கள் விழுந்தாலும் எளிதில் சரிப்படுத்திவிடலாம். அதைவிடுத்து சிக்கல் முடியுடன் தூங்க சென்றால் அதன் பாதிப்பு அதிகமாகி விடும். அதனால் முடியின் அடர்த்தியும், வலிமையும் குறையும். முடி கொட்டுதல் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும்.

* இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பின்னந்தலையில் வியர்வையோ, ஈரப்பதமோ படிந்திருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியமானது. ஏனெனில் அப்படி ஈரப்பதம் இருந்தால் அது மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொடுகு தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இரவில் குளித்தால் கூந்தலை நன்றாக உலரவைத்துவிட்டுத்தான் தூங்க வேண்டும்.

* இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து மயிர்கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவது நல்லது. அதன் மூலம் மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். மயிர்கால்கள் வலுப்படுவதால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இரவில் மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் காலையில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிடுவது நல்லது.

* தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். ஏனெனில் தினமும் அதில் தலையை வைத்து படுக்கும்போது அதில் அழுக்குகள் சேர்ந்துவிடும். தலையில் இருக்கும் எண்ணெய்யும் தலையணை உறையில் படிந்து அழுக்குடனும் சேர்ந்துவிடும். அதில் தொடர்ந்து தலைவைத்து படுப்பது முடிக்கு பாதிப்பாகிவிடும்.

Related Articles

Latest Articles