இலங்கைக்கு உதவி – தமிழக அரசுக்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல்

பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தமிழ் நாடு அரசு நிவாரண உதவியைப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ள நிலையில்அதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் வழங்கும் நிவாரண உதவி ஒத்துழைப்புக்களுக்கு மேலதிகமாக இந்த நிவாரண உதவி அமையும் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தமிழக அரசாங்கம் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளதுடன் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அதற்கான அனுமதியை மத்திய அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.

அதற்கிணங்க நேற்றைய தினம் இந்திய மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு மேலதிகமாக தமிழ்நாடு மாநில அரசாங்கம் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்றும் அவர் மத்திய அரசாங்கத்தின் சார்பில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் கடிதம் மூலம் தமிழக முதல்வருக்கு அறிவித்துள்ளார்.

தமிழக அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு தமிழக எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏகமனதான இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளன.

அதற்கிணங்க 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு தமிழ் நாட்டு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Latest Articles