இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கை சிறைகளில் இப்போது ஒரு இந்திய மீனவர்கூடஇல்லை. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இதுவரை 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் கடலோர பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
இலங்கை தமிழர்களின் நலனை மத்திய அரசு உறுதி செய்துவருகிறது. இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனையை இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.