இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனாவின் பிடிவாதம்!

ஆபத்தான நேரத்தில் உறவினரை அறிந்துகொள்ளலாம் என்று ஒரு சொல்லாடல் உண்டு. இது நாடுகளுக்கிடையிலான உறவுகளிலும் பொருந்தும்.

இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் வழங்கும் உதவிகளும், ஒத்துழைப்புகளும் பெரும் ஆறுதலாக இருக்கிறது. காரணம் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான நிலையில் இந்திய பேருதவிகளை வழங்கியிருந்தது. நெருக்கடியான நேரத்தில் உதவி வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆனால் சீனாவின் நிபந்தனைகளும், நெருக்குவாரங்களும் இலங்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எந்த ஒரு நாடும் இந்தியா வழங்கியதை போன்று அதிக கடனை வழங்கவில்லை. ஒரு சில நாடுகள் ஐந்து மில்லியன், பத்து மில்லியன், 20 மில்லியன் என்ற வகையில் உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் இந்தியா சர்வதேச நிறுவனங்கள் ஊடாக அன்றி நேரடியாக இலங்கைக்கு இவ்வருடத்தில் சுமார் மூன்று பில்லியன் டொலர்களை கடனாகவும் பொருளாகவும் வழங்கி இருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளுக்கு பின்னர் 2.9 பில்லியன்களையே இலங்கைக்கு வழங்க கொள்கையளவில் முன்வந்துள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம், இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும்.

அதனடிப்படையில் இலங்கை தற்போது தனக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இருக்கின்றது. பரிஸ்கிளப் அமைப்பின் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்காக சர்வதேச ரீதியில் ஆலோசனை நிறுவனம் ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் இந்த கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுக்களுக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.

எனினும் இந்த விடயத்தில் சீனா கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கு தயக்கம் காட்டிவருகிறது. காரணம் சீனா இவ்வாறு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதில்லை.

எனினும் இலங்கை தற்போது தனக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்தால் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும். எனவே சீனாவுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இணக்கம் காண வேண்டும். சீனா இந்த விடயத்தில் என்ன செய்யப் போகிறது என்பதே இங்கு மிக முக்கியமான விடயமாக காணப்படுகிறது.

ஆனால் இங்கு அவதானம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விடயம் ஒன்று காணப்படுகின்றது. அதாவது தற்போது சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க நிபந்தனைகளை விதித்துள்ளதுடன் கடன் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் அயல்நாடான இந்தியா இலங்கைக்கு 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன் உதவியை வழங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் இந்த கடன் உதவி வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வருடத்தில் பல மட்டங்களின் கீழ் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது. தெற்காசிய நாணய பரிமாற்று ஏற்பாடுகள் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை இந்தியா ஏற்கெனவே வழங்கியிருந்தது. அதேபோன்று இலங்கை 500 மில்லியன் டொலர் கடன் ஒன்றை செலுத்துவதற்கான உதவியையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது. அதனைத் தொடர்ந்து 1.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. மேலும் இலங்கை இந்தியாவுக்கு செலுத்த வேண்டியிருந்த ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா தாமதப்படுத்தியது. அதன் பின்னரும் மீண்டும் 500 மில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு கடனுதவியாக வழங்கியுள்ளது.

அப்படி பார்க்கும்போது சுமார் 4 பில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. கடன் தாமத நிலையை விடுத்து பார்த்தால் இந்தியா 3 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இந்த உதவிகளுக்கு மத்தியிலும் கடன் மறுசீரமைப்புக்களைச் செய்வதற்கு இந்தியா இணங்கியுள்ளது. ஜப்பானும் சாதகமான பதில்களைத் தந்துள்ளது. ஆனால் சீனா மட்டும் பிடிவாதம் பிடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் உயிருக்குப் போராடி வரும் இலங்கையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கொண்டு சீனா பேரம் பேசுவதாக விமர்சிக்கப்படுகிறது. இலங்கையின் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை சீனா அசைத்துப் பார்க்க முயற்சிக்கிறது.

கிழக்காசிய நாடுகளில் பொருளாதாரத்தால் நாடுகளை தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சீனாவின் வித்தையை இலங்கையிலும் காண்பிக்க முயற்சிக்கிறது. ஆனால் அனைத்து தரப்புக்களில் இருந்தும் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு இலங்கைக்கு நம்பிக்கையைத் தந்தாலும், சீனா தனது அரசியல் சதுரங்க ஆட்டத்தை இலங்கையில் தொடர்ந்து காண்பிக்க முயற்சிக்கிறது. வாழ்வா, சாவா நிலையில் இருக்கும் இலங்கைக்கு, ஆபத்தால் நண்பனை அறிந்துகொள்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

Related Articles

Latest Articles