நாட்டில் உயிர் காப்பு மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு கிடையாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் 14 வகையான உயிர்காப்பு மருந்து வகைகளும் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பான்மையானஅத்தியாவசிய மருந்து வகைகள் கையிருப்பில் உள்ளன. எவ்வாறெனினும், 384 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் 153 வகையான மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த வகை மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரிசி, சீனி, பருப்பு இறக்குமதி செய்வது போன்று மருந்து இறக்குமதி செய்ய முடியாது. உரிய நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்திய கடன் அடிப்படையில் மருந்து வகைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தெரிவித்த அமைச்சர், மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் சில ஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.