இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

எம்.பி. லக்‌ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் விளைச்சலை மேற்கொண்டுள்ளார்.

மேற்படி விவசாயிடம் பயிர்ச்செய்கை தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, ஆப்பிள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதை நேரில் வந்து பார்ப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

ஆப்பிள் விதைகளை இந்நாட்டுக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே பயிர்ச்செய்கையை முன்னெடுத்ததாகவும் இரண்டு ஏக்கரில் அறுவடை கிடைத்திருப்பதாகவும் விவசாயி லக்‌ஷ்மன் குமார தெரிவித்தார்.

இந்த விளைச்சலை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்து, அவற்றை விநியோகிப்பதற்கு முடியுமென்றும் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் இதற்கான பயிர்ச்செய்கையை முன்னெடுக்கும் வகையிலேயே இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயி கையளித்த பச்சை நிற அப்பிளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அதனை ருசி பார்ப்பதற்கும் மறக்கவில்லை.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாஸ் மற்றும் பீ.ஜே. அசங்க லயனல் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles