இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் 2024 ஜனவரி 26 ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது. உலகின் பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி நடைமுறைக்கு வந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கது. இந்த அரசியலமைப்பின் முகவுரையானது இந்தியாவை, இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றைக் கொண்ட ஒரு நாடாகப் பிரகடனப்படுத்துகின்றது.

இத்தினத்தை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். இந்திய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையின் குறிப்புகளும் உயர் ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் இசை குழுவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கமைத்திருந்த கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.

இந்தியாவின் செழிப்புமிக்க பன்முகத்தன்மையானது பல்வேறு நாட்டுப்புற நடன வடிவங்களை அரங்கேற்றியிருந்த கலாசார நிகழ்வின் மூலமாக வெளிக்காண்பிக்கப்பட்டிருந்தது. இதில் குஜராத்தின் கர்பா நடனமும் உள்ளடங்குகின்றது.

யுனெஸ்கோ மனிதகுலத்தின் அருவமான கலாசார மரபுரிமை பட்டியலில் குஜராத்தின் கர்பா நடனம் மிகவும் அண்மையில் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான இந்திய சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, உயிர் தியாகம்செய்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத்தூபியில் உயர் ஸ்தானிகர் அவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இன்று மாலை விசேட வரவேற்பு உபசாரம் ஒன்றும் இந்திய இல்லத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையிலுள்ள பல்வேறு துறைகளையும் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.
