” இலங்கையில் கடந்த காலங்களைவிட தற்போது மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுள்ளது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” இலங்கையில் கடந்த காலங்களைவிட தற்போது ஜனநாயக மற்றும் மனித உரிமைகளில் மாற்றம் இடம்பெற்றுள்ளது என்பதை சர்வதேசம் ஏற்றுள்ளது. இதற்கமையவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்கூட அறிக்கை முன்வைத்துள்ளார்.
அதேபோல மேற்படி தரப்புகளால் கண்காணிப்பு செய்யப்பட்டு சில விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவை தொடர்பில் வெளிவிவகார அமைச்சும், அரசும் அவதானம் செலுத்தியுள்ளன. இது தொடர்பில் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் அல்லது மாநாடு நடைபெறும் தருவாயில் அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிடும்.
அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். புதிய சட்டம் இயற்றப்படும்வரை தற்காலிகமாக அது பயன்படுத்தப்படும்.”- என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.