இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியிலிருந்து ஐந்து வீரர்களுக்கு விடுகை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.
அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (காயம் காரணமாக), குசல் மெண்டிஸ், மினோத் பானுக்க, லஹிரு குமார, நுவன் ப்ரதீப் ஆகிய ஐந்து வீரர்கள் அணியிலிருந்து விடுகை பெற்று அவர்களது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.
விடுகை வழங்கப்பட்டுள்ள வீரர்கள் கொழும்பிலுள்ள உயர் ஆற்றல் வெளிப்பாடு நிலையத்தில் பயிற்சிகளில் ஈடுபட திரும்பி வருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து அணித் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.
குசல் மெண்டிஸின் இடத்தை ரொஷேன் சில்வா நிரப்புவார் எனவும் பூரண குணமடைந்துள்ள சுரங்க லக்மால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.