மேற்கிந்திய தீவுகள் , இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது.
மேற்கிந்திய தீவுகள் , இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மே.தீவுகள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மே. தீவுகள் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குணதிலக பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
விக்கெட் காப்பாளர் சந்திமல் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஹசரங்க அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 47 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ஓட்டங்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் மொகமது 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லெவிசும், ஷாய் ஹோப்பும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தது.
எவின் லெவிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார். ஷாய் ஹோப் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கு வழங்கப்பட்டது.