ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 439 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால், மெத்யூஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
பின்னர் 241 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 3-வது நாள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது. 4 ஆவது நாட் ஆட்டம் இன்று ஆரம்பமானது. ஆப்கான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 296 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் அவ்வணி இழந்தது.
56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
8 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.