இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக செப்டம்பரில் நடத்தப்படும் தேசிய மட்டத்திலான தேர்தல்!

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1982 முதல் 2019 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தாலும் பெரும்பாலும் இரு முனை போட்டியே நிலவியது.
2019 ஜனாதிபதி தேர்தலின்போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தாலும் கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலேயே கடும் போட்டி நிலவியது. ஆனால் இம்முறை மும்முனை போட்டி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் வேட்பாளர் ஒருவரால் முதல்சுற்று வாக்கு கணக்கெடுப்பின்போது 51 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெறமுடியுமா என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. அதேபோல 2ஆம் மற்றும் 3 ஆம் விருப்பு வாக்குகளின் முக்கியத்துவம் பற்றியும் அரசியல் களத்தில் பேசப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் 51 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது பற்றி கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலின்போது எழுதியுள்ளேன். அடுத்துவரும் நாட்களில் அது மீள் பதிவு செய்யப்படும். இல்லையேல் எனது முகநூல் பக்கத்தில் அதனை தேடி பார்க்கலாம்.)
இலங்கையில் 1931 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டுவருகின்றது.
ஆனால் தேசிய மட்டத்திலான தேர்தலொன்று (ஆட்சியை தீர்மானிக்கின்ற) செப்டம்பர் மாதம் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
இலங்கையில் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்ற திகதி விபரம் பற்றி பார்ப்போம்.
முதலாவது பாராளுமன்ற தேர்தல் 1947 ஆகஸ்;ட் 23 முதல் செப்டம்பர் 20 ஆம் திகதிவரை 11 நாட்கள் நடைபெற்றன.
ஒரே நாளில் தேர்தல் நடக்கும் நடைமுறை 1960 முதல்தான் அமுலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு செப்டம்பரில் நடந்திருந்தாலும் ஆகஸ்ட்டில்தான் தேர்தல் ஆரம்பமானது என்பது கவனிக்கத்தக்கது.
1947 இற்கு பிறகு 2015 வரை 14 பாராளுமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. எனினும், எந்தவொரு தேர்தலும் செப்டம்பர் மாதம் நடந்ததில்லை.
1982 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டுவருகின்றது. 1988, 1994, 1999, 2005, 2010, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தல்கள் நடந்துள்ளன. எனினும், இம்முறையே செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்கள் நடக்கின்றது.
இலங்கை வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை எடுத்துக்கொண்டால் செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நாடாளுமன்றத்துக்கென பதவிகாலம் உள்ளது, ஜனாதிபதி பதவிக்கும் காலவரையரை உள்ளது. எனவே, சூழற்சி முறையில் வரும்போது குறிப்பிட்ட சில மாதங்களில்தான் தேர்தலை நடத்த முடியும் என சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் இலங்கையில் முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் செப்டம்பரில் தேர்தல் இடம்பெறவில்லை.
( இதில் என்ன புதிய தகவல் உள்ளது, இது என்ன விசேடம் என நினைக்கலாம், ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பில் பல வருடங்களாக பல தகவல்களை தந்துவிட்டேன். தேர்தல் நடத்தப்படும் மாதம் ஒரு புதிய தகவலாக எனக்கு தென்பட்டது. அதனை வழங்கியுள்ளேன்.)
எனினும், 2012 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் செப்டம்பர் மாதம் நடந்துள்ளது. கடைசியாக 2014 இல் ஊவா மாகாணசபைத் தேர்தலும் செப்டம்பரில் நடந்துள்ளது. இதுவே இறுதி மாகாணசபைத் தேர்தல். அதன்பிறகு இற்றைவரை இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடக்கவே இல்லை.
இலங்கையில் தேர்தல் நடந்த வருடம், மாதம், திகதி விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆர்.சனத்

Related Articles

Latest Articles