கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி நேற்று (30) இலங்கையை வந்தடைந்தது. இதில் இரு அணிகளும் முதலில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளன. இது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக மைதானம் சென்று நேரடியாக பார்வையிட முடியும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி ரசிகர்கள் 4 மற்றும் 9ஆம் இலக்க நுழைவாயில்களின் மூலம் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக அண்மையில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டிகளையும் ரசிகர்கள் நேரடியாக பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் போதிய ரசிகர்கள் வருகை தராத நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் சபை இந்த அனுமதியை வழங்கி இருந்தது.
இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் இரு அணிகளும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளன. ஒருநாள் போட்டிகள் பல்லேகலவிலும் டி20 போட்டிகள் தம்புள்ளையிலும் நடைபெறவுள்ளன.