தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆளுமைகள் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை ஆளுமைகள் அணி, 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் (Road Safety World Series) என்ற முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பங்குபற்றும் உலகக்கிண்ண தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஆளுமைகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா ஆளுமைகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளை இழந்து 125ஓட்டங்களைப் பெற்றது. நுவான் குலசேகர 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆளுமைகள் அணி, 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை ஆளுமைகள் அணியின் சார்பில் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும், அதிரடி காட்டிய ஜயசிங்க 47 ஓட்டங்களையும் பெற்றனர். சனத் ஜயசூரிய, டில்சான் ஆகியோர் தலா 18 ஓட்டங்களைப் பெற்றனர்.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய நுவான் குலசேகர ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
இறுதிப்போட்டிய நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இலங்கை, இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.