இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் முதல் ஒருநாள் எதிர்வரும் 18 ஆம் திகதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி – 20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால், இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோல், அணியின் உதவி ஊழியர் (வீரர்களின் ஆட்டம் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்பவர்) ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து, இந்தியா – இலங்கை இடையேயான போட்டி அட்டவணை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 17-ம் திகதி நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், 17-ம் திகதி நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி 18-ம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி 20-ம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 23-ம் திகதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், இரு அணிகளுக்கு இடையேயான ரி- 20 போட்டிகள் முறையே 25, 27, 29 ஆகிய திகதிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

