இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மே. தீவுகள் அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 169 ஓட்டங்களைப்பெற்றது. திரிமான்னே 70 ஓட்டங்களையும், திக்வெல்ல 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன்பின்னர் தமது முதலாவது இன்னிங்சிற்காகமேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்று கொண்டது.
அதேவேளை, இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 476 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணியின் பெத்தும் நிசங்க 103 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார். அறிமுக போட்டியில் சதமடித்த நான்காவது இலங்கை வீரர் என இடம்பிடித்தார்.
நிரோஷன் திக்வெல்ல 96 ஓட்டங்களையும் ஓசத பெர்ணான்டோ 91 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பின்னர் 375 என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.