உக்ரைனுக்கு அதிநவீன இரண்டு நாசாம்ஸ் (NASAMS) வான் பாதுகாப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட சுமார் 820 மில்லியன் டொலர் மதிப்பிலான மேலதிக ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை மையமாகக் கொண்ட நேட்டோ தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த ஆயுதங்கள் அனுப்பப்படுகின்றன.
உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவுக்கு அருகே உள்ள அடுக்குமாடி கட்டடம் மற்றும் ஓய்வு விடுதி மீது ரஷ்யா நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இதேபோன்று மத்திய உக்ரைன் கிரெமென்சுக் நகரில் (Kremenchuk) உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 59 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் ஒரு மிருகத்தனத்தை உக்ரேனியர்கள் எதிர்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் நாட்டிற்காக தொடர்ந்து போராடுகிறார்கள், மேலும் அமெரிக்கா அவர்களுக்கும் அவர்களின் நியாயமான காரணத்திற்காகவும் தொடர்ந்து உதவுகிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.