வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார்.
பிறகு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேசினார். இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ரஷ்ய ஜனாதிபதி புதின் ,
“ எந்தவொரு போர்நிறுத்தமும் நடைமுறைக்கு வந்த மறுநாளே, உக்ரைனில் படைகளை நிறுத்தும் மேற் கத்திய நாடுகளின் திட்டங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். உக்ரைனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு துருப்பும் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும். ” என்று குறிப்பிட்டார்.