உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகினால் உலகுக்கு உணவு அளிப்பது கடினமாக இருக்கும் என்று உலக உணவுத் திட்ட தலைவர் சின்டி மெக்கைன் எச்சரித்துள்ளார்.
வரும் மே 18 ஆம் திகதி இந்த உடன்படிக்கை காலவதியாகவிருக்கும் நிலையில் அது புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பி.பி.சி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மெக்கைன் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போருக்கு மத்தியில் அந்நாட்டில் இருந்து மில்லியன் தொன் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக இந்த உடன்படிக்கை உள்ளது. ஐ.நா மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூலை மாதமே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது.
2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்து ரஷ்ய போர் விமானங்கள் கறுங்கடலில் உக்ரைனிய துறைமுகங்களை அடைவது முடக்கப்பட்டது. இதனை அடுத்து சர்வதேச அளவில் உணவு பிரச்சினை ஒன்று ஏற்பட்டது.
உக்ரைன் உலகின் பிரதான சூரியகாந்தி, சோளம், கோதுமை மற்றும் பார்லி ஏற்றுமதி நாடாக இருப்பதோடு உலக உணவுத் திட்டத்தினால் கடந்த ஆண்டு பெறப்பட்ட பாதிக்கும் அதிகமான கோதுமைத் தானியம் உக்ரைனில் இருந்து வந்ததாகும்.
