உடரதல்ல தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

நானுஓயா உடரதல்ல தோட்ட தொழிலார்களால் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (28) நிறைவுக்குவந்தது. மலையக தொழிலாளர் முன்னணியின் இயக்குனர் எம்.கணகராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உடரதல்ல தோட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஷ்ணன் அண்மையில் நேரடியாக விஜயம் செய்து தொழிலார்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தாம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

இதற்கமைய இன்று பேச்சுவார்த்தை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் தோட்ட கம்பனி சார்பாக கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் பிராந்திய பொது முகாமையாளர் அநுர சேனாநாயக்க, தோட்ட அதிகாரி கிருசாந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக வேங்குருசாமி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் நிரோசன், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் சிவஞானம், சிரேஸ்ட தொழில் இயக்குனர் எம்.சந்திரன் மற்றும் தோட்ட கமிட்டி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் முன்வைத்த 17 கோரிக்கைகளும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இதற்கான தீர்வுகளை தோட்ட கம்பனி தீர்த்து வைப்பதாக இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை நிறைவிற்கு கொண்டு வருவதாக தொழிற்சங்கங்களின் தோட்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

ஏதிர்காலத்தில் தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்கள் தொடர்பில் தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடி அவற்றை முன்னெடுப்பதற்கும் தோட்ட நிர்வாகத்தினர் இனக்கம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு திரும்புகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த 25 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles