” மலையக பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களில் ஒரு தொகுதியினருக்கு நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறவுள்ளமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தமும் ஓர் காரணமாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களின் ஒரு தொகுதியினர் தமது தொழில் தகைமைகளைப் பூர்த்தி செய்து கொண்ட போதும் அவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில் பல்வேறு பட்ட இழுபறி நிலைமைகள் காணப்பட்டன.
இந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பில் ஒத்திவைக்கப்பட்ட பிரேரணை ஒன்றை முன்வைத்தார். இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான வேலுசாமி ராதாகிருஷ்ணன், உதயகுமார் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தத்தம் கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்தப் பிரேரணை தொடர்பில் பதிலளித்த கல்வி அமைச்சர் ஜி. எல் .பீரிஸ் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்விடயம் தொடர்பில் மாகாண சபைகளுக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள சகல தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்கள், ஆசிரியர் கலாசாலைகளில் தமது ஆசிரியர் பயிற்சி மற்றும் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.” – என்றார்.