” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் உண்மையை வெளிப்படுத்தும், தேசிய சர்வதேச பங்குதாரர்களை ஈடுபடுத்திக் கொண்ட விசாரணை ஊடாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று வலியுறுத்தினார்.
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள்.” எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் தனக்கு உண்மை தெரியும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறிய தான் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருக்கும் நிலையில், இனியும் காத்திருக்காமல் உயிர் தியாகம் செய்த அப்பாவி மக்களுக்காக உண்மையை வெளிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
