உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது யார்? பிரதான சூத்திரதாரிகள் யார்? உண்மையான நோக்கம் என்ன என்பன தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை வழங்குகின்றோம்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கும்போது மைத்திரிபால சிறிசேனதான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். எனவே, அவர் தற்போது வெளியிடும் தகவல் பாரதூரமானது. தாமதிக்காமல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார் விஜித ஹேரத்.
