உலகப்புகழ் பெற்ற இயக்குநர் கொரோனாவால் உயிரிழப்பு!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 59.

தெற்காசிய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடமும் பிடித்த பிரபல இயக்குநர்களில் ஒருவர் கிம் கி டுக். கொரியாவைச் சேர்ந்த இவர் இயக்கிய ’சமாரிடன் கேர்ள்’, ’3 அயர்ன்’, ’ஒன் ஆன் ஒன்’ உள்ளிட்டப் படங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவை.

வெனிஸ், பெர்லின் என சர்வதேச திரைப்பட விழாக்களில் இவரின் படம் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கிம் கி டுக், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது.

சமீபத்தில், சொந்தமாக வீடு வாங்குவதற்காக நவம்பர் 20இல் லட்வியா நாட்டுக்கு சென்றிருந்திருக்கிறார் கிம். இதற்காக ஜுர்மலா என்கிற கடல் பகுதியில் வீடு பார்த்து வைத்திருந்தவர், அதனை பேசி முடிப்பதற்காக சென்றுள்ளார். நவம்பர் 20ஆம் திகதி சென்ற கிம் குறித்து அடுத்தகட்ட தகவல் ஏதும் வெளியாகததால் அச்சம் அடைந்த அவரின் நண்பர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர்.

இதன்பிறகுதான் அவர் கொரோனா பாதிப்பின் காரணமாக அவதிப்படும் தகவல் வெளிவந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் உயிரிழந்தார் என்று தகவலை தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவரின் மறைவு செய்தியை அறிந்த உலக சினிமா ரசிகர்கள் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles