உலக சாதனை கைதியின் வழக்கு மீள் விசாரணை

உலகில் நீண்ட காலம் மரண தண்டனை கைதியாக உள்ள ஜப்பானின் முன்னாள் குத்துச்சண்டை வீரரான 87 வயது இவாவோ ஹகமடா மீதான வழக்கை 55 ஆண்டுகளின் பின் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது முதலாளி மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்ததாக 1968 ஆம் ஆண்டில் ஹகமடா குற்றங்காணப்பட்ட நிலையில் தாம் வற்புறுத்தப்பட்டு வாக்கு மூலம் பெற்றதாக பின்னர் குறிப்பிட்டிருந்தார்.

‘இந்த நாளுக்காக 57 ஆண்டுகளாக நான் காத்திருந்தேன்’ என்று ஹகமடாவுக்காக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரது சகோதரி ஹிடேகோ தெரிவித்துள்ளார்.

உலகில் நீண்ட காலம் மரண தண்டனை கைதியாக இருப்பவர் என ஹகமடா 2014 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்தார்.

1936 ஆம் ஆண்டு பிறந்த ஹகமடா தனது முதலாளி, அவரது மனைவி மற்றும் இரு பதினம் வயது குழந்தைகளை கொலை செய்தது மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதற்காகவே 1968 ஆம் ஆண்டு மரண தண்டனைக்கு முகம்கொடுத்தார்.

குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த இரத்தக் கறை படிந்த ஆடை ஒன்று மாத்திரமே அவருக்கு எதிரான ஆதாரமாக முன்வைக்கப்பட்டிருந்தது.

ஜப்பானில் ஒரு சில மணி நேர அறிவித்தலில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதோடு இதனால் அவர் தனிமைச் சிறையிலேயே அதிக காலத்தை செலவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles