ஊவா மாகாண சபையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், திணைக்களங்கள் சிலவற்றின் தலைமைப் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) ஊவா மாகாண ஆளுநர் ஏ .ஜே .எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஊவா மாகாண சபையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் தலைமைப் பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரிகளின் இடத்திற்கு புதிய நிறுவனத் தலைவர்களின் நியமனம், வேறு சில நிறுவனங்களில் கடமையாற்றிய பதவி நிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் என்பன இதன் போது வழங்கப்பட்டன.
இதன்படி, மாகாண விவசாய அமைச்சின் புதிய செயலாளர் பதவிக்கு, ஊவா மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய காமினி மகிந்தபால ஜோபிஸ் நியமனம் பெற்றார். வெளிமடை கல்வி வலயத்தில் பணிப்பாளராக கடமையாற்றிய ரோஹித அமரதாச ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், மாகாண கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளராக கடமையாற்றிய ஜீவந்த ஹேரத் ,மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் புதிய செயலாளராகவும், எஸ்.ஜெயசிங்க மாகாண உள்ளக கணக்காளர் பிரிவிற்கு புதிய பணிப்பாளராகவும்,
பசறை கல்வி வலயத்தில் பணிப்பாளராக கடமையாற்றிய ஜே.எம். சேனாதீர ஊவா மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராகவும், டி.கங்காநந்த ஊவா மாகாண கட்டிடப் பிரிவு பணிப்பாளராகவும், சமந்த கித்சிரி ஊவா மாகாண வரவு செலவுத் திட்டப் பிரிவின் பணிப்பாளராகவும், வியலுவ கல்வி வலயத்தில் பணிப்பாளராக கடமையாற்றிய தம்மிக ஹேரத் பதுளை கல்வி வலயத்தின் பணிப்பாளராகவும் ,பதுளை கல்வி வலயத்தில் பணிப்பாளராக கடமையாற்றிய சரத் ரணசிங்க பசறை கல்வி வலயத்தின் பணிப்பாளராகவும், ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சரீனா பேகம் வெளிமடை கல்வி வலயத்தின் பணிப்பாளராகவும், பண்டாரவளை கல்வி வலயத்தில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி. எஸ்.விமலவீர வியலுவ கல்வி வலயத்தின் பணிப்பாளராகவும், பதுளை கல்வி வலயத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி. சாரங்கி ஹெட்டியாரச்சி பண்டாரவளை கல்வி வலயத்தின் பணிப்பாளராகவும், சம்பத் நிஸ்ஸங்க,மாகாண கைத்தொழில் திணைக்களப் பணிப்பாளராகவும், திருமதி என்.சத்துராங்கனி சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களப் பணிப்பாளராகவும்,
டி.சம்பத் ஊவா மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளராகவும், ஆர்.எம். தயாரத்ன மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளராகவும், பி.குமார மொனராகலை மாவட்ட பொது நிர்வாக உதவி ஆணையாளராகவும் நியமனம் பெற்று நியமனக் கடிதங்களை மாகாண ஆளுநரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.