” நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த பொலிஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேற்படி சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.
நாட்டில் பல இடங்களில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதன் பின்புலம் பற்றி உங்கள் புலனாய்வு பிரிவுக்கு கண்டுபிடிக்க முடியவில்லையெனில், எங்களிடம் திறமையான புலனாய்வாளர்கள் இருக்கின்றனர். அவர்களால் ஓரிரு நாட்களுக்குள் கண்டுபிடிக்ககூடியதாக இருக்கும்.” – எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றமன்றத்தில் நேற்று உரையாற்றிய சார்ள்ஸ் எம்.பி. , இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தியாக தீபம் திலீபன் அண்ணனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியில் செல்லும்போது, பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் வைத்தே மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இதனை ஏன் பொலிஸார் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர், பொலிஸாரின் முன்னிலையிலேயே தாக்கப்பட்டுள்ளார். எமது மக்கள்மீது இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இது.
இப்படியான சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் நாளடைவில் கொடூரமான சம்பவங்கள் இடம்பெறக்கூடும்.
அதேபோல உத்திக பிரேமரத்ன எம்.பியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது, யார் சுட்டார்கள், ஏன் சுட்டார்கள், துப்பாக்கி எங்கிருந்து வந்தது ?
இதற்கு பொலிஸ்துறை அமைச்சர் பதில்கூற வேண்டும்.
ஒன்று புலனாய்வுதுறை வீழ்ச்சியடைந்திருக்க வேண்டும், இல்லையேல் இப்படியான சம்பவங்களுக்கு ஆட்சியாளர்கள் துணைநிற்க வேண்டும். உங்களிடம் (அரசிடம்) சிறந்த புலனாய்வாளர்கள் இல்லை என்று சொன்னால், எங்களுடைய புலனாய்வாளர்களை உங்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றோம். சம்பவம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் அவர்களால் பின்புலம் குறித்து கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதற்கான அனுமதி இல்லை.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துப்பாக்கிச்சூட்டு கலாசாரத்துக்கு முடிவுகட்டப்பட வேண்டும். ” – என்றார்.
