” அழிவில் இருந்து மீண்டெழுந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கின்றது. எந்த கொம்பனாலும் கட்சியை அழிக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் எமது கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.”
இவ்வாறு மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை அழிப்பதற்கு முற்பட்டனர். கட்சியின் ஆதரவாளர்கள் பேர வாவிக்குள் தள்ளப்பட்டனர். அரசியல் பிரமுகர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்து பயணத்தை மேற்கொண்டுவருகின்றோம். எமது கருத்துகளுக்கு சமூகவலைத்தளங்களில் ‘ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கும் (ஆர்ஐபி) நபர்கள் உள்ளனர். யார் என்ன செய்தாலும் கட்சியை அழிக்க முடியாது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் பிரதான சக்தி எமது கட்சிதான், அதேபோல்தான் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களிலும் பிரதான தரப்பு எமது கட்சிதான்.” – என்றார்.