தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. காணி, வீடு குறித்து உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. எனினும், கல்வித்துறையில் பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அவர்கள் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வி மறுசீரமைப்புக்காக அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் மலையகத்தில் எதுவும் நடக்கவில்லை. வீடு கட்டவில்லை. காணி வழங்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. பொருட்களின் விலை எகிறியுள்ளது. பாடசாலைகளில் இடைவிலகல் அதிகரித்துள்ளது.
தம்மைதவிர ஏனையோர் அனைவரும் திருடர்கள் எனக்கூறியே தேசிய மக்கள் சக்தி வாக்கு கேட்டது. ஆனால் உள்ளுராட்சிசபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தற்போது அனைவருடனும் கூட்டு சேர்கின்றனர். ஆட்சி அதிகாரத்துக்காக அவர்கள் எல்லாவற்றையும் செய்கின்றனர். இப்படியானவர்கள் எவ்வாறு கள்வர்களைப் பிடிப்பார்கள்?
நாட்டில் பாதுகாப்பு நிலைவரமும் மோசமாக உள்ளது. நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய செவ்வந்திகூட இன்னும் கைது செய்யப்படவில்லை. நாட்டில் சுகாதாரத்துறையும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் உற்பத்தி இல்லை. தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. கிழங்கு, வெங்காயம், மரக்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நிர்க்கதியாகியுள்ளனர். இந்நிலைமை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் விவசாயம் கைவிடப்படலாம்.” – என்றார்.