அவசரமாக விமான நிலையம் செல்வதற்கு எரிபொருள் இல்லாமல் தவித்த ரஷ்ய தம்பதிக்கு கலேவெல தலகிரியாகம பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தங்களது பாதுகாப்பு இருப்புகளிலிருந்து எரிபொருளை வழங்கி அவர்களை விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்த சம்பவமொன்று கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
நாடு திரும்புவதற்காக விமான நிலையம் செல்லவிருந்த ரஷ்ய தம்பதியினர் எரிபொருள் இல்லாமல் தவித்துள்ளனர். பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முற்றாக மூடப்பட்டிருந்ததால், அவர்கள் எரிபொருளைப் பெற முடியாமல் தவித்துள்ளனர்.
தாம் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வந்த தம்பதியென்றும், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு செல்வதற்கு எரிபொருள் வழங்குமாறும் கேட்டுள்ளார்.
அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் ராஜபக்ச பண்டார என்பவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதிலும், தனது எரிபொருள் பம்பிகளுக்கு சேதம் ஏற்படாதவாறுதனது பாதுகாப்பு கையிருப்பிலிருந்து அவர்களது தேவையை பூர்த்தி செய்ய முன்வந்துள்ளார். ரஷ்ய சுற்றுலாப்பயணி அவரது சேவை குறித்து திருப்தி தெரிவித்ததுடன், இது குறித்து தூதரகங்களுக்கும் அறிவிப்பதாக கூறினார்.
இலங்கை மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும், தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்து, இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்கு உதவுமாறும் ரஷ்ய சுற்றுலா பயணிகளிடம் எரிபொருள் நிலையத்தினர் தெரிவித்தனர். இந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியும் நாட்டின் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்து நெகிழ்ச்சியுடன் வெளியேறினார்.
