உள்வீட்டு நாடக சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து உடனடியாக எரிபொருள் விலை அதிகரிப்பை மீளப் பெற அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மண்ணென்ணை விலை அதிகரிப்பினால் சாதாரண மலையக மக்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு மக்களை கஸ்டத்தில் தள்ளிவரும் இந்த அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையை ஆகாயம் தொடும் அளவிற்கு உயர்த்தி மக்களின் தலையில் மேலும் சுமையை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தேயிலை விலை கூடும் போது லாபத்தை பற்றி வாய்திறக்காது மௌனமாகவே இருந்து விட்டு உலக சந்தையில் விலை குறையும் போது வௌியில் வந்து நட்டக் கணக்கை காட்டி புலம்பும் பெருந்தோட்ட கம்பனிகள் போலவே இந்த அரசாங்கமும் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது அதன் லாபத்தை மக்களுக்கு வழங்காது விலை அதிகரித்த பின் மக்கள் மீது சுமையை ஏற்றி எரிபொருள் விலையை பாரிய அளவு அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாது எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டு அதனை மறக்கடிக்கச் செய்யவென புதுவித கூட்டு நாடகம் ஒன்றை தற்போது அரங்கேற்றி வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் ஒன்று சேர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்புக்கான அனுமதியை வழங்கிவிட்டு அதனை அறிவித்த அமைச்சர் மீது பழிசுமத்தி தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
உண்மையில் பிரதமரை பதவி விலக வேண்டும். அல்லது அமைச்சரவை பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த நாட்டில் புதுமையாக ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சரவை பதவி விலகுமாறு கூறுவதும் ஆளும் அமைச்சர் நாட்டின் பிரதமரை பதவி விலகுமாறு கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. இந்த நாட்டு மக்களை ஆட்சி செய்ய தகுதி அற்ற அரசாங்கம் இது என்பது மிகத் தௌிவாக தெரிகிறது.
கொரோனா காலத்தில் பயணத்தடை விதிக்கப்பட்டு மக்களுக்கு வறுமான வழிகள் இல்லாது செய்யப்பட்டிருக்கும் இந்த காலத்தில் அவர்களின் சுமையை குறைக்க நிவாரணம் வழங்க வேண்டுமே தவிர அவர்களிடம் இருக்கும் கொஞ்சத்தையும் பிடுங்கி திண்ண முயற்சிக்கக் கூடாது. ஆனால் இந்த அரசாங்கம் கொஞ்சம்கூட கருனை இன்றி அதனை செய்துள்ளது.
இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். உள்வீட்டு நாடக சண்டையை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக எரிபொருள் விலை உயர்வை அரசாங்கம் மீளப் பெற வேண்டும். இல்லையேல் மக்கள் அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.