எல்.பி.எல்.மூலம் மாலிங்க படைக்கவுள்ள சாதனைகள்!

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் இலங்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இரண்டு முக்கிய மைல்கற்களை எட்டவுள்ளார்.

வரும் நவம்பர் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவிருக்கும் இந்தத் தொடரில் 37 வயதான மாலிங்க காலி கிளாடியேட்டர் அணிக்கு தலைமை வகிக்கிறார்.

இதன்போது அவர் 300 ஆவது டி-20 கழகமட்டப் போட்டியில் ஆடி புதிய சாதனை படைக்கவுள்ளார். அதேபோன்று இந்த வடிவ கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டை தொடுவதற்கு அவருக்கு இன்னும் 10 விக்கெட்டுகளே தேவையாக உள்ளது. இந்த மைல்கல்லையும் எதிர்வரும் தொடரில் அவர் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத மாலிங்க தனது சொந்த மண்ணில் இந்த சாதனைகளை எட்ட வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த தொடரின் லீக் மட்டப் போட்டிகளில் ஐந்து அணிகளும் எட்டுப் போட்டிகளில் ஆடவுள்ளன. இதன்படி வரும் டிசம்பர் 5ஆம் திகதி நடைபெறும் போட்டியில் மாலிங்க தனது 300 ஆவது ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அதன்போது கிளாடியேட்டர்ஸ் அணி தம்புள்ளை வைகிங்ஸை எதிர்த்தாடவுள்ளது.

இதன்போது 300 டி-20 போட்டிகளில் ஆடிய ஒருசில வீரர்கள் பட்டியலில் மாலிங்க இடம்பிடிப்பார். இந்த வரிசையில் மேற்கிந்திய தீவுகளின் கிரன் பொலார்ட் 528 போட்டிகளில் ஆடி முதலிடத்தில் உள்ளார். அதேபோன்று டி-20 இல் 400 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரராகவும் மாலிங்க சாதனை படைக்க எதிர்பார்த்துள்ளார். இதில் பிராவோ 471 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles