மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடகராக இருந்தார்.
அவரது திரையுலக வாழ்கையில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலகளை பாடியுள்ளார். இந்திய அரசின் சிவிலியன் விருதான பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்மபூஷன் (2011) ஆகிய விருதுகள் உள்பட பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகள், திரையுலகின் முக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.
திரையுலகில் 50 ஆண்டுகளாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆற்றிய பணிக்கு லதா மங்கேஷ்கர், சுப்புலட்சுமி பூபன் ஹசாரிகா, பீம்சென் ஜோஷி போன்றோர்களுக்கு வழங்கப்பட்டதை போல் இந்திய உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கவேண்டும் என கூறியிருந்தார்.