மலையகப் பெருந்தோட்ட மக்கள் கடந்த இருநூறு ஆண்டு காலமாக காணி வீடு கல்வி சுகாதாரம் முதலான அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணிக்கப்படுவதாகவும் ஏனைய சமூகங்களில் இருந்து பாரபட்சமான முறையில் நடாத்தப்படுவதாகவும் எடுத்துக் கூறி இது அரை அடிமைத்தனத்துக்கு ஒப்பானது என்றும் இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் தமது எழுத்து மூல கோரிக்கையை அடிமைத்தனத்துக்கு எதிரான ஐநா விஷேட அறிக்கையாளரான டொமொயா ஒபோகாட்டா விடம் கையளித்துள்ளதாக மலையக அரசியல் அரங்கம் அறிவித்து உள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் தங்கி இருந்த அடிமைத்தனத்துக்கு எதிரான ஐ.நாவிஷேட அறிக்கையாளர் டொமொயா ஒபகாட்டோ தமது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புகையிலேயே ஐ.நா கொழும்பு வளாகத்தில் ஊடகச்சந்திப்பை (03.12.2021) நடாத்தி இருந்தார். இதன் போதே மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நா..கிருஷ்ணகுமார் தமது அமைப்பின் சார்பான கோரிக்கை மனுவை கையளித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது.
ஏதேனும் வடிவத்தில் அடிமைகள் போன்று நடாத்தப்படும் மக்கள் சமுதாயத்தினர் இலங்கையில் இருப்பார்களாயின் அவர்கள் குறித்த விபரங்களை
பெற்று ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கையிடும் பணியினை மேற்கொள்ளவே விஷேட அறிக்கையாளர் டொமொயா ஒபகாட்டோ இலங்கை வருகை தந்து இருந்தார். இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக கடந்த இருநூற்றாண்டு காலமாக நாட்கூலி முறையிலே வைக்கப்பட்டுள்ள சமுதாயத்தினர் காணி உரிமை மறுக்கப்பட்டவர்களாக உரிய வீட்டு வசதி வாய்ப்புகள் சுத்தமான குடிநீர் சுகாதார வசதிகள் மறுக்கப்படவர்களாக கல்வியிலும் பாரபட்சம் காட்டப்பட்டவர்களாக வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும் நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு பெருமளவில் பங்களிப்பு செய்த மோதும் கூட இன்னும் இலஙகையில் அதிக வறுமை மட்டத்தில் வாழ்பவர்களாகவும் அவர்களே உள்ளனர் போன்ற விடயங்களையும் சுட்டிக்காட்டி இதனால் குடும்ப வறுமை சிறுவர் தொழில் பெண்கள் உரிமை பாதிப்பு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு இல்லாமை போன்ற மாறுபட்ட பிரச்சினைகள் தோன்றி சிறுவர் – பெண்கள் துஷ்பிரயோகம் மரணம் முதலான இன்னல்களுக்கு தோட்டத் தொழிலாளர் சமூகம் தள்ளப்படுவதாகவும் எமது எழுத்து மூல ஆவணத்தில் பதிவு செய்து விஷேட அறிக்கையாளரிடம் கையளித்தோம்.
ஐக்கிய நாடுகள் சபை இது குறித்த கவனத்தைப் பெற்று இலங்கையில் காணி உரிமையுடன் கூடியதான கௌரவமான பிரஜைகளாக தோட்டத் தொழிலாளர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் வலியுறுத்தலை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்பதுமே எமது கோரிக்கையின் பிரதான அம்சமாக இருந்தது.
எமது மனுவில் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் அவர்களும் அமைப்பின் செயலாளரான நானும் கையொப்பமிட்டுள்ளோம் எனவும் கிருஷ்ணகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.
