ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள் உடன் மூவர் நேற்று (07) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
33, 28 மற்றும் 26 வயதுகளுடைய பதுளை வினிதகம பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பதுளை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை புவக்கொடமுல்ல பகுதியில் சந்தேக நபர்கள் வாடகை அடிப்படையில் விடுதியொன்றை நடத்தி இதன் போது குறித்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பில் சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 7130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் 617 மில்லிகிராம் போதை மாத்திரைகள் 04 ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் பதுளை தலைமை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி தலைமையில் பொலிஸ் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர்களை விசாரணையின் பின்னர் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
ராமு தனராஜா
