ஐ.தே.க. பிரதித் தலைவராக ருவான்? பொருளாளர் பதவிகளுக்கும் இன்று உறுப்பினர் தேர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன இன்று (14) நியமிக்கப்படக்கூடும் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதித் தலைவர், பொருளாளர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு வாக்கெடுப்பின்றி உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாச, பொருளாளர் பதவியை வகித்த ஹர்ஷ டி சில்வா, தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்படுகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே புதியவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கட்சியின் தொழிற்சங்க பிரிவுகள், மகளிர் அணி, இளைஞர் அணி மற்றும் ஊடகப்பிரிவு ஆகியவற்றை பலப்படுத்துவதற்கான பொறுப்பு பிரதித் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது என்றும், அதற்கான கால எல்லை டிசம்பர் மாதம்வரை வழங்கப்படும் எனவும் சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இப்பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பட்சத்தில் 2021 ஜனவரியில் ஐ.தே.கவின் புதிய தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவுசெய்யப்படுவார் எனவும் அறியமுடிகின்றது.

தேசியப்பட்டியல் உறுப்பினருக்கான தேர்வும் இடம்பெறும்.

Related Articles

Latest Articles