ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர், வோல்கர் டர்க், 2025 ஜூன் 23 முதல் 26 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார்.
2016, பெப்ரவரிக்குப் பின்னர் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது, உயர் ஆணையாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், பல பிற அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் ஆகிய தரப்பினருடனும் அவர் சந்திப்புகளை மேற்கொள்வார்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, உயர் ஆணையாளர் கண்டிக்கு பயணம் மேற்கொள்வார்; அங்கு அவர் புனித தளதா மாளிகைக்கு மரியாதை செலுத்துவதோடு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமைப் பீடாதிபதிகளையும் சந்திப்பார். அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், அங்கு அவர் முறையே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திப்பார்.
மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடனான, இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கு ஏற்ப, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை மேலும் முன்னேற்றுவது குறித்து இவ்விஜயத்தின் போது இடம்பெற இருக்கும் முக்கியமான கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.