ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் ஆதரவு – இலங்கை நம்பிக்கை

ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியதால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு வழங்கக்கூடும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெனிவாத் தொடர் மற்றும் புதிய அரசமைப்பு ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கடந்த ஆட்சியின்போது அரசமைப்பு ஊடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சி எடுத்தபோது அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். ஒற்றையாட்சி மற்றும் ஒருமித்த நாடு ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கவும். அவ்வாறு இல்லையேல் அது பிரிவினைவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

ஒற்றையாட்சி என்பது நாட்டில் எல்லா பகுதிகளிலும் ஒரு சட்டம் அமுலில் இருப்பது. இங்கு 18 வயதில் திருமணம் முடிக்க கூடியதாக இருந்தால் அதே நிலைதான் யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டும். அங்கு 15 வயதில் திருமணம் முடிக்க முடியாது.ஆனால் ஒருமித்த நாடெனில் 9 மாகாணங்களில் பல சட்டங்கள் இருக்கும். அதுவே சமஷ்டிக்கு வழிவகுக்கும்.

இந்த நாட்டை பிரித்து வடக்கில் ஈழம் உருவானால் எம்மால் சாசனத்தை பாதுகாக்கமுடியாமல்போகும். எனவேதான் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதால் எந்தவொரு நாடும் எமக்கு ஆதரவு வழங்கவில்லை. ஆனால், இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளதால் 47 நாடுகளில் பல நாடுகள் எமக்கு இம்முறை ஆதரவளிக்ககூடும்.” – என்றார்.

Related Articles

Latest Articles