ஒக்டோபர் 9 முதல் மொஸ்கோவிலிருந்து விமான சேவை ஆரம்பம்

ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமான சேவை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மொஸ்கோவிலிருந்து கொழும்புக்கு விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி, நிறுவனம் ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்கும்.தாய்லாந்தின் பேங்கொக்கிற்கான விமானங்கள் அக்டோபர் 30 ஆம் திகதி மீண்டும் தொடங்குவதோடு மேலும் வாரத்திற்கு ஏழு விமானங்கள் அங்கு சேவையில் ஈடுபடும்.

அத்துடன் நவம்பர் 2 ஆம் திகதி முதல் இந்தியாவின் கோவாவிற்கு வாரத்திற்கு மூன்று விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது.

ஏரோஃப்ளோட், தனது விமானம் ஒன்று கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் இலங்கைக்கான விமானங்களை நிறுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. விமானத்தை குத்தகைக்கு எடுத்தவருடன் தொடர்புடைய ஒரு ஐரிஷ் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாகவே விமானம் தடுத்து வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்திய நிலையில், அண்மையில் அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கையின் சார்பில் மன்னிப்பு கோரினார்.

Related Articles

Latest Articles