பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
ஜோ ரூட்டை (1,098 ரன், 15 டெஸ்ட்) பின்னுக்கு தள்ளிய அவர் 1,170 ரன்களுடன் (9 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) போட்டியையும் சேர்த்து பாபர் அசாம் இந்த ஆண்டில் 25 முறை 50-ரன்களுக்கு மேல் (17 அரைசதம் மற்றும் 8 சதம்) எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக முறை 50-க்கு மேல் ரன் அடித்தவரான ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங்கின் (2005-ம் ஆண்டில் 24 முறை) சாதனையை முறியடித்தார்.
இந்த ஆண்டில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் பாபர் அசாம் இதுவரை 2,542 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரரான முகமது யூசுப்பின் (2006-ம் ஆண்டில் 2,435 ரன்) சாதனையை முந்தினார்.