ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் இடம்பெற்ற முறுகல் நிலையினையடுத்து தோட்ட அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் 10 தோட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 16 தோட்டத் தொழிலாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 தொழிலாளர்களை எதிர்வரும் புதன்கிழமை பிணையில் விடுதலை செய்வதற்கும், மேலும் கைது செய்ய தேடுதல் நடைபெற்றுவரும் எஞ்சிய 16 தொழிலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிணையில் விடுவித்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக இ.தொ.கா வின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக இ.தொ.கா தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ராஜதுறை, எதிர்வரும் புதன்கிழமை 10ஆம் திகதி பிணையில் விடுவித்துக் கொள்வதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.