ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணத்துக்கும், தமிழக அரசியலுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. தேர்தலுக்காக இலங்கையில் வடபகுதி குறித்தும், கச்சத்தீவு பற்றியும் அங்கிருந்து வெளியாகும் அறிவிப்புகள் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தமிழக அரசியல் வாதிகளின் கருத்துகளுக்கான பதிலடியாகவா ஜனாதிபதியின் கச்சத்தீவு விஜயம் அமைந்தது என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கவே ஜனாதிபதி வடக்குக்கு சென்றார். நாட்டில் ஏனைய பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் ஆரம்பமாகும்.
தென்னிந்திய அரசியல்வாதிகள் தமது வாக்குகளுக்காக வடக்கு மற்றும் கச்சத்தீவு பற்றி அறிவிப்புகளை விடுவது வழமை. கச்சத்தீவு பற்றி மீள கதைக்க வேண்டியதில்லை. அது எமக்கு உரித்தானது. தற்போது அங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.