தலவாக்கலை – கட்டுகலை தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் இம்மாதம் (07) ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் இன்று (5) உத்தரவு பிறப்பித்தார்.
தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் கடந்த (28) ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸாரால் 11 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டனர் என்று சம்பவம் தொடர்பில் நான்கு பெண்கள், ஏழு ஆண்கள் என 11 தொழிலாளர்களை தலவாக்கலை பொலிசார் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இவர்களை (29) மாலை நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இம்மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர்களை கடந்த முதலாம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது இன்று (05) திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து விளக்கமறியலில் இருந்து குறித்த 11 தொழிலாளர்களும் அழைத்து வரப்பட்டு மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதை விசாரணைக்கு எடுத்து கொண்ட மாவட்ட நீதவானிடம் தலவாக்கலை பொலிசார் மனுவுக்கு எதிராக ஆட்சேபனையை தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட நீதவான் சந்தேக நபர்களை (07) ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நிருபர் – டி.சந்ரு
