தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு சகல தொழிற்சங்கங்களுக்கும் இருக்கிறது. அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என கருதுபவர்கள் தமது விதண்டாவாத கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு எம்மோடு இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கணபதி கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய வல்லமை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதை அவருடைய ஊடக அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
அவருடைய எதிர்பார்ப்பை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிறைவேற்றி வைக்கும். எனினும் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது மட்டுமின்றி தமக்கென அரசியல் இயக்கம் ஒன்றை வைத்துக்கொண்டு தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நாட வேண்டியிருக்கின்றது என்ற ஆதங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது காற்புணர்ச்சி கருத்துக்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரின் ஊடக செயற்பாடு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதாக அமைந்திருக்கிறது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதில் ஒரு இலக்கு நிர்ணயித்து செயல்படுவதில் தவறில்லை. அதைத்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் செய்தார். சில வேலைகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் எமது முயற்சியில் தளர்ச்சி ஏற்படாது.
அதேபோல இலக்கும் தவறாது. நாம் எப்போதும் தேர்தலுக்காக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை கையில் எடுத்தது கிடையாது. ஆனால் தேர்தலை கூட அவர்களின் சம்பள உயர்வுக்கான பேரம் பேசும் ஆயுதமாக பயன்படுத்தி வந்திருக்கிறோம். இது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வரலாற்றை சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு விளங்கும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மிகக் கரிசனையோடு செயற்படுவதாக இருந்தால் நாம் நாளை கொழும்பில் நடத்துகின்ற போராட்டத்துக்கு தாராளமாக வருகை தரலாம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தோட்ட கம்பணிகளின் போக்கை கண்டித்து மலையக நகரங்களில் கண்டன பேரணிகளை நடத்த இருக்கிறோம்.
அதற்கு முன்னோடியாக நாளையிலிருந்து கறுப்புக்கொடி கட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை உள்ள வேலு குமார் எம்மோடு சேர்ந்து கறுப்புக் கொடி கட்டுவதற்கு வரலாம்.
அது மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை எங்கள் பேரணியில் கலந்து கொள்ளலாம். தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வேண்டும் என்று வலியுறுத்தலாம். கம்பனிகளின் போக்கை கண்டித்து கோஷம் எழுப்பலாம். இதை விடுத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி செயல்படுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசை விமர்சனம் செய்து அடிமட்ட விளம்பரம் தேடுவதை பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.