கறுப்பு பணத்தை சட்டபூர்வமாக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கறுப்பு பணத்தை சட்டபூர்வமாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்ட ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மத்திய வங்கி ஊடாகவே இடம்பெறும். நாடாளுமன்றில் தற்போது சட்ட ஏற்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தது மத்திய வங்கி, அங்கு தனக்கு தேவையான விடயங்களை செய்வதற்காகவே அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பில் மக்கள் மத்தியிலும் சந்தேகம் உள்ளது.
தற்போது மத்திய வங்கி ஆளுநராக உள்ள பேராசிரியர் லக்ஷமனைவிடவும் எந்த விதத்தில் அஜித் நிவாட் கப்ரால் உயர்ந்தவர்? எனவே, நியமனத்தின் நோக்கம் தெளிவாகின்றது. கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையில் பகுதி 2 ஐ முன்னெடுக்கவே இந்த நியமனமாகும்.
மக்கள் மனம் அறிந்த தலைவரான பஸில் ராஜபக்ச வந்தால் மாற்றம் நடக்கும் என பிரச்சாரம் முன்னெடுத்தனர். பஸிலும் நிதி அமைச்சரானார். நடந்துள்ள மாற்றம் என்ன? இருந்தவையும் இல்லாமல்போயுள்ளன. உள்ளாடைகளும் இல்லாமல்போகபோகின்றது. எனவே, பொருளாதார கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியாது.” -என்றார்.
அதேவேளை, இந்த குற்றச்சாட்டை அஜித் நிவாட் கப்ராலும் ஆளுங்கட்சியினரும் நிராகரித்துள்ளனர்.