” கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை முற்றாக முழுமைப்பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்வரை செல்லும்.” – என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” கல்வி மறுசீரமைப்பை இரு வருடத்துக்குள் செய்ய முடியாது. மறுசீரமைப்பு நடவடிக்கை நிறைவுபெற குறைந்தபட்சம் 10 வருடங்கள்வரை செல்லும். கல்விக் கொள்கைத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலும் அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அது தற்போது துறைசார் மேற்பார்வை குழுவின் கண்காணிப்பில் உள்ளது. மேலதிக யோசனைகள் உள்ளடக்கப்பட்டு அனுப்பட்ட பின்னர் அத்திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் அமுலாக்கல் நடவடிக்கை இடம்பெறும். கட்டம், கட்டமாகவே அமுலாக்கல் இடம்பெறும்.
தரம் ஒன்று முதல் ஐந்துவரை உள்ள மாணவர்களுக்கு பரீட்சை நடவடிக்கையை முடிந்தளவு குறைத்துவிட்டு, வகுப்பறையில் செயற்பாட்டு கல்வியை வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின்போது உரிய தினத்தில் பரீட்சை நடத்துவதற்கும், உரிய காலப்பகுதியில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவும் உத்தேசித்துள்ளோம்.” – என்றார்.