கஹவத்தையில் குடிநீரின்றி தவிக்கும் 150 குடும்பங்கள்

கஹவத்தை ஒபாத இரண்டாம் பிரிவு தோட்டப் பகுதியில் வசிக்கும் 150 குடும்பங்கள் குடிநீர் வசதியின்மையால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இப்பகுதியில் நீரினை சேகரித்து வைத்து அமைக்கப்பட்ட இரண்டு நீர்த்தாங்கிகளும் பழுதடைந்துள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.

கொடக்கவெல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இப் பிரதேசத்தில் உள்ள நீர் ஊற்றினால் நீரினை பெற்றுக்கொள்ள சுமார் இரண்டு , மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

ஓபாத இரண்டாம் இலக்க பிரிவில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையில் சுமார் 49 மாணவ மாணவிகள் கல்விகற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ள நீரூற்றை தேடி 200 மீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அதேசமயம் கிராம மக்களும், பாடசாலை மாணவர்களும் இந்த நீரூற்றின் அருகில் குடிநீரைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த நீரூற்று சாக்கடை வழியாக ஓடுவதால் சுத்தமான தன்மை குறைவாக உள்ளதாகவும் இதற்கு மாற்று வழியாக நீரினை சேகரிக்கும் நீர்த்தாங்கியினை புனரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நீரூற்றின் மூலம் தேவையான நீர் குழாய்களைப் பொருத்தி பாடசாலைக்கும் கிராமத்திற்கும் நீரினைப் பெற்றுத் தருமாறும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles