காணி அபகரிப்புக்கு எதிராக நீதிப் போராட்ட நடவடிக்கை

காணி அமைச்சால் வெளியிடப்பட்ட 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணியை அரசுடைமையாக்கும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் சார்பில் நீதிப் போராட்டத்துக்கான நடவடிக்கை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இன்று ஆரம்பமானது.

வடக்கில் அரசுக்குக் காணி அபகரிக்கும் நோக்கத்துடன் 28.05.2025 இல்    வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமரும் கைவிரித்தமையால்  நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யும் நோக்கில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையாக நில அபகரிப்பு பிரதேசத்தில் சட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கில் 5 ஆயிரத்து 940 ஏக்கர்  காணியை அரச காணியாகச் சுவீகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசு மீளப் பெற வேண்டும் எனக் கோரி மேற்கொள்ளவுள்ள சட்ட நடவடிக்கையின் முதல் கட்டமாக நில உரிமையாளர்களிடம் உள்ள ஆவணங்களைச் சீர்செய்யும் முகமாக இந்த நடமாடும் சட்ட உதவி இடம்பெறுகின்றது.

இதன் முதல் கட்டமாக வடக்கின் 4 மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் வெற்றிலைக்கேணி நில உரித்தாளர்களுக்குத் தேவையான இலவச சட்ட உதவிகளை வழங்கும் வகையில் அந்த இடத்துக்கே சட்டத்தரணிகள் குழாம் இன்று நேரில் சென்றது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் சுமார் 25 சட்டத்தரணிகள் பங்கேற்றனர்.

வெற்றிலைக்கேணி ரம்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இந்தச் சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் இடம்பெற்ற வேளை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சட்ட உதவிகளைப் பெற்றனர்.

Related Articles

Latest Articles